போகர்


குரு:அகத்தியர்
காலம்:300 ஆண்டுகள், 18 நாட்கள்
சீடர்கள்:கொங்கணவர், கருவூரார், புலிப்பாணி, இடைக்காடர்
சமாதி:பழனி
இவர் அகத்திய முனிவரின் சீடர் ஆவார். சித்த வைத்திய மற்றும் இரசவாத முறைகளில் சிறந்து விளங்கினார். போகர் 7000, போகர் 12000, சப்த காண்டம் 7000 போன்ற பல நூல்களை இயற்றினார். நவபாஷாணங்களை கொண்டு பழனி முருகனின் திருவுருவச்சிலையை செய்தவர். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார்.
போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.
போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர். இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.
“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு. அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.
போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.
போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.
சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.
பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.
“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.
அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.
போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.
போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.
அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.
அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.
போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.
தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.
போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.
போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.
இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு.
பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.
#திருச்சிற்றம்பலம்_முருகா_போற்றி
நேரில் சென்று பார்த்தால் கூட பார்க்க
முடியாத அற்புத காட்சி முருகா சரவணபவா
போற்றி #நவபாசான_விக்ரகம் 🍁🍃
https://www.facebook.com/groups/siddhar.science
 

*****
Wisdom of Siddhas சித்தரியல்
Posted By Nathan Surya
****










Comments

  1. ஓம் ஆம் ஊம் மாகா போக சித்தர் சுவாமியே போற்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விஞ்ஞான தமிழ் மெஞ்ஞானம்..!

சித்தர்கள் வகுத்த அறவியல் மற்றும் அறிவியல்

'விதியை மதியால் வெல்லலாம்'